Share via:
தமிழக அரசு கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதால், உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுதாக்கல் செய்துள்ளது.
தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் என்னவென்றே தெரியவில்லை ஆரம்பத்தில் இருந்தே ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. அந்த வகையில் துணை வேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளிட்ட 13 மசோதாக்கள் இன்றளவும் ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. மசோதாக்கள் குறித்த எந்த நகர்வையும் ஆளுநர் மேற்கொள்ள மறுக்கிறார்கள் என்றும், தமிழக அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்பட்டு வருகிறார் என்று ஆரம்பத்தில் இருந்தே விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் மாநில அரசு நிறைவேற்றி அனுப்பும் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் உரிய நேரத்தில் ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்துகிறார் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனால் அரசு கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் கொண்டு வர வேண்டும் என்று அந்த மனுவில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.