Share via:
சமீப காலமாக அதிகரித்து வரும் இளம் வயதினரின் மாரடைப்புக்கு காரணம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதுதான் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் தொற்று உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் பரவி பல லட்சம் உயிர்களை பலி கொண்டது. இருப்பினும் பலர் நோய் தொற்றில் இருந்து மீண்டு இயல்பு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.
இதற்கிடையில் அண்மை காலமாக இளம் வயதினர் அதிகளவில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடையும் அவலநிலை ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. சமீபத்தில் கூட குஜராத் மாநிலத்தில் பிரபலமான ‘கார்பா’ நடன நிகழ்ச்சியின் போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மட்டும் சுமார் 22 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. இவர்கள் அனைவரும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் இது குறித்து மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், ‘‘இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், கொரோனா பெருந்தொற்றுக்கு ஆளானவர்கள் குறித்து ஒரு விரிவான ஆராய்ச்சியை நடத்தியது. அதில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் தங்கள் உடலை அதிகளவில் வருத்திக் கொள்வது ஆபத்தாக முடியலாம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக தீவிர கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் சுமார் 2 ஆண்டுகள் வரை தங்கள் உடலுக்கு அதிகளவில் சிரமத்தை ஏற்படுத்தக்கூடாது. மேலும் உடற்பயிற்சி மற்றும் கடின உழைப்பு தேவைப்படும் எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்றும், அப்படி செய்தால் மாரடைப்பு வருவதற்கான அதிக வாய்ப்பு இருக்கிறது’’ என்றும் மான்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
சமீப கால அதிக மாரடைப்பு மரணங்களுக்கு காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை மந்திரி மான்சுக் மாண்டவியாவின் தற்போதைய பதில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.