News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று தனது 52வது ஆண்டு விழாவை கோலாகலமாக கொண்டாடி வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்த மாவட்டந்தோறும் அ.தி.மு.க.வினர் தங்கள் மகிழ்ச்சியுடன் சேர்த்து இனிப்புகளையும் பகிர்ந்து வருகின்றனர். சற்று பின்னோக்கி பார்க்கும் போது அ.தி.மு.க. இந்த 52 ஆண்டு காலத்தை எப்படியெல்லாம் கடந்துவந்தது? அதன் ஏற்ற இறக்கங்கள் என்னென்ன என்பது குறித்து விளக்குகிறது இந்த சிறப்பு செய்தி தொகுப்பு.

தி.மு.க.வில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியுடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்தவர் தான் நடிகரும், முன்னாள் முதல்வரான எம்.ஜி.ராமச்சந்திரன். ஒரு கதாநாயகனாக மக்கள் மனதில் நீங்காத இடம்பெற்றிருக்கும் எம்.ஜி.ஆரின் செல்வாக்கு தி.மு.க.வில் அந்த காலத்தில் அதிகளவில் இருந்தது என்றே சொல்ல வேண்டும். இதன் காரணமாகக் கூட அவர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களால் அவர் கட்சியில் இருந்து நீக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார் என்று சொல்வார்கள் வரலாறு தெரிந்தவர்கள்.

மு.கருணாநிதியின் ஏற்பட்ட மனக்கசப்பால் தி.மு.க.வில் இருந்து வெளியே வந்த எம்.ஜி.ஆர். கடந்த 1972ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் தேதி அ.தி.மு.க.வை நிறுவினார் என்பது மட்டுமே நாம் அறிந்தது. ஆனால் உண்மை அதுவல்ல. 

அந்த காலத்தில் மக்கள் மத்தியில் எம்.ஜி.ஆர். பெருமளவில் பிரபலமாக இருந்ததுடன் சேர்த்து, தி.மு.க.வில் கடினமாகவும், நேர்மையாகவும் உழைத்த அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்ற அனுதாபமும் சேர்ந்து கொண்டது. அந்த நேரத்தில்தான் எம்.ஜி.ஆர். அனகாபுத்தூர் ராமலிங்கம் என்பவர் பதிவு செய்து வைத்திருந்த அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

பொது மேடையில் ஒரு முறை பேசிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர். இந்த தகவலை பகிரங்கமாக மக்கள் முன்பு பகிர்ந்து கொண்டார். அவர் பேசும்போது, ‘‘ஒரு சாதாரண தொண்டன் தொடங்கிய கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்” பெருந்தன்மையுடன் ஒப்புக் கொண்டார். அப்படிப்பட்ட நிலையில்தான் அ.தி.மு.க.வின் தொடக்க விழா கொண்டாடப்பட்டது.

தனது அயராத முயற்சியாலும், தனது ஆதரவாளர்களின் ஒத்துழைப்பாலும் அ.தி.மு.க. என்ற கட்சியை தேசிய கட்சியாக உருமாற்றினார் எம்.ஜி.ஆர்.

அதன்படி 1972ம் ஆண்டு முதல் அ.தி.மு.க. வாரிசுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கட்சியின் கடைகோடி தொண்டனுக்கும் முக்கியத்துவமும், பதவியும் கொடுத்து வருகிறது. அப்படிப்பட்ட அ.தி.மு.க. இன்று தனது 52ம் ஆண்டு விழாவை கொண்டாடி வருகிறது.

எம்.ஜி.ஆருக்கு பிறகு அவரது மனைவி ஜானகி முதலமைச்சர் பொறுப்பேற்றாலும் சொற்ப நாட்களிலேயே பதவியில் நீடிக்க முடியாமல் போனது துரதிருஷ்டவசமானது. எம்.ஜி.ஆருக்கு பின்னர் ஜெயலலிதா, அவர் சிறைக்கு செல்லும்போது ஓ.பன்னீர்செல்வம், தற்போது அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி என்று சலசலப்புக்கும் அக்கட்சியின் பஞ்சம் கிடையாது.

இதற்கிடையில் அ.தி.மு.க.வையும் கட்சிக் கொடியையும், கட்சியின் சின்னத்தையும் முறைப்படி கைப்பற்றியே தீருவோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரியும் டி.டி.வி.தினகரன், சசிகலா…. அப்பப்பா மூச்சு வாங்குகிறது.

இதில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், 1972ல் கட்சி  தொடங்கி, 1977ல் ஆட்சியை பிடித்த எம்.ஜி.ஆர் 1987ம் ஆண்டு வரை முதலமைச்சராகவே இருந்து மறைந்தார். 

அவரின் மறைவுக்கு பின்னர் இரட்டை புறா, – சேவல் என உடைந்த அதிமுகவை ஜெயலலிதா நீண்ட போராட்டத்திற்கு பின்னர் 1989 ஆண்டு தேர்தலை தொடர்ந்து கைப்பற்றி அனைவரையும் பிரமிக்க வைத்தார். 

அன்றுமுதல் ஜெயலலிதா அ.தி.மு.க.வை கட்டுக்கோப்புடனும், கண்ணியத்துடனும் வழிநடத்தி வந்த நிலையில் தான் கடந்த 2016ல் மறைந்தார். அன்று தொடங்கியது அக்கட்சிக்கு தலைவலி. இருகுழல் துப்பாக்கி என்று சொல்லும் அளவுக்கு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அடிக்கடி முட்டிக் கொண்டு இணைந்தனர். ஆனால் இறுதியில் ஓ.பன்னீர்செல்வம் 2022 ஜுலை 11ல் அ.தி.மு.க. தொண்டர் கூட கிடையாது என்று அவர் அ.தி.மு.க.வில் இருந்து விரட்டியடிக்கப்பட்டார்.

ஜெயலலிதா சிறை செல்லும் போது என்னைத்தான் முதலமைச்சராக நியமித்தார்கள் என்று உரிமை கொண்டாடி வரும் ஓ.பன்னீர்செல்வத்துடன் ஆதரவாளர்கள் சிலரும் பிரிந்து சென்று விரைவில் உண்மையான அ.தி.மு.க.வை அடையாளப்படுத்தி கைப்பற்றுவோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறார்கள்.

ஒட்டுமொத்த பலமே தன்னிடம் தான் இருக்கிறது என்று ஆதாரத்துடன் நீதிமன்றத்தை நாடிய எடப்பாடி பழனிசாமி  இறுதியில் அதிமுகவின் பொதுச் செயலாளராக விஸ்வரூபம் எடுத்தார்.

 

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் என்ற அங்கீகாரத்துடன் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, கட்சியை உயர்த்துவதிலும், சரியில்லாதவர்களை களையெடுப்பதிலும் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில்  பா.ஜ.க.வுடன் இனி கூட்டணியே கிடையாது என ஒரே போடாய் போட்டு கட்சித் தொண்டர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். ஏனென்றால் மறைந்த முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா, அண்ணாதுரை உள்ளிட்டோரை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தரக்குறைவாக பேசியதால் தொண்டர்கள் உச்சகட்ட கடுப்பில் இருந்தனர்.

எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் ஒன்றறை கோடியாக இருந்த உறுப்பினர்கள் தற்போது 2 கோடியாக அதிகரித்துள்ளனர். எப்படியும் 2024ம் ஆண்டு தேர்தலில் 40 இடங்களையும் வென்றுவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் 52வது ஆண்டு விழா அதிகளவு உத்வேகத்தை கொடுத்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.

பா.ஜ.க.வுடனான கூட்டணி முறிவு, ஓ.பன்னீர்செல்வம் விரட்டப்பட்டது எல்லாமே சரிதான் என்று சொல்ல வேண்டும் என்றால், வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதுதான் ஒரே வழி. பொறுத்திருந்துதான் பார்ப்போமே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link