Share via:
தமிழக சட்டப்பேரவையின் 3வது நாள் கூட்டத்தொடரில் இருந்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க.பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்தார்.
தமிழக சட்டப்பேரவை இன்று 3வது நாளாக கூடியது. அப்போது கேள்வி, பதில் நேரத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
அப்போது அவர் பேசும்போது, ‘‘துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தை மரபை மாற்ற வேண்டாம். ஏற்கனவே இது குறித்து 10 முறை கடிதம் எழுதியுள்ளோம். ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 3 சட்டமன்ற உறுப்பினர்களை நீக்க கோரியும் நடவடிக்கை இல்லை என்று குற்றம்சாட்டி பேசினார்.
அதைத்தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு பதில் அளித்து பேசும்போது, எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக, சட்டம் விதி என்ன சொல்கிறதோ அதன்படிதான் நடக்கிறேன். நீங்கள் கொடுத்ததை மறுக்கவில்லை என்றும் இருக்கை விவகாரம் தொடர்பாக வீம்பாக நடவடிக்கைவில்லை என்றும் பதில் அளித்தார்.
மேலும் சட்டமன்றத்திற்குள் இருக்கை குறித்த கேள்வி எழுப்ப உரிமை கிடையாது என்று சொன்ன அப்பாவு, இருக்கைகள் ஒதுக்குவது எனது தனிப்பட்ட உரிமை என்றும் ஒருவர் எந்த சின்னத்தில் வென்று பேரவைக்குள் வருகிறாரோ அதே சின்னத்தில்தான் கடைசி வரை பார்ப்பேன் என்று பதில் அளித்தார்.
இதற்கிடையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் பேச முற்பட்டதால் சிறிது நேரம் சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் அ.தி.மு.க. உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டதால், எதிர்க்கட்சியினரை அவையை விட்டு வெளியே அனுப்பும்படி உத்தரவிட்டார்.
இருக்கை விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சபாநாயகர் அப்பாவு பதிலில் திருப்தி இல்லை என்று கூறியும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, ‘‘காவிரி விவகாரத்தில் தமிழக அரசு கண்துடைப்பு நாடகம் நடத்துகிறது என்றும், கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக குற்றம் சாட்டி பேசினார். மேலும் இது குறித்து தன்னிடம் பல ஆதாரங்கள் உள்ளது என டேப் ஒன்றையும் செய்தியாளர்கள் மத்தியில் காண்பித்தார். இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.