Share via:
பா.ஜ.க.வுடனான கூட்டணி தொடருமா? என்பது குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மாவட்ட செயலாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தி முடிவுகளை அறிவிக்க உள்ளார்.
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து மறைந்த தலைவர்களான அண்ணாதுரை, ஜெயலலிதா உள்ளிட்டோர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியது சர்ச்சையை கிளப்பியது. அதன் தொடர்ச்சியாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர்ராஜூ உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து தக்க பதிலடி கொடுத்தனர்.
இதில் ஜெயக்குமார் மட்டும் கொதித்தெழுந்து இனி அ.தி.மு.க- பா.ஜ.க. கூட்டணி கிடையாது என்று பொதுவெளியில் அறிவிப்பு வெளியிட்டார்.
அன்று முதல் பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணி தொடருமா? முறிந்ததா என்று பட்டிமன்றம் வைக்கும் அளவுக்கு பல்வேறு தரப்பினர் தங்கள் கருத்துக்களை பதிவிடத் தொடங்கினர்.
இதற்கிடையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பா.ஜ.க. மூத்த தலைவர் அமித்ஷாவை சந்தித்தார். அன்றைய சந்திப்பில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் சீட் குறித்து பேசப்பட்டதாக கூறப்பட்டது.
அதன் பின்னர் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், பா.ஜ.க. மூத்த தலைவர் அமித்ஷாவை சந்திக்க அனுமதி கேட்டதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இருப்பினும் பா.ஜ.க. தேசிய தலைவரான ஜே.பி.நட்டாவை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்திவிட்டு சென்னை திரும்பினார்கள்.
இந்நிலையில் இன்று பிற்பகல் 3.45 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்க உள்ளார் என்று தெரிகிறது. மேலும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு முன்னர் மாவட்ட செயலாளர்களும், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களும் பா.ஜ.க.வுடனான கூட்டணி குறித்து பொதுவெளியில் பேட்டி கொடுக்கவும், போஸ்டர் ஒட்டவும் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.