Share via:
இந்தியா கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்பது குறித்து மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக சொல்வாரா என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சங்கரன்கோவிலில் நடைபெற்ற அ.தி.மு.க.வின் 52வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்கள் முன்பு உரையாற்றினார்.
அவர் பேசும் போது, ‘‘நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற வாய்ப்பில்லை. தி.மு.க. நிச்சயமாக தோல்வியடையும். அ.தி.மு.க.வின் முந்தைய ஆட்சி கால உழைப்பால்தான் தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்று தெரிவித்தார்.
தி.மு.க. ஆட்சியில் மக்களைப் பற்றிய கவலை ஏதுமில்லை என்று குற்றம்சாட்டி பேசிய அவர், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றும், கல்விக் கட்டணத்தை ரத்து செய்வதாகவும் வாக்குறுதி கொடுத்தனர். ஆனால் அந்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள் என்று குற்றம்சாட்டி பேசினார்.
அடுத்ததாக குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு, தி.மு.க.வை சேர்ந்தவர்களுக்கு மட்டும் உரிமை தொகையை கொடுத்து வருவதாக தெரிவித்தார்.
பின்னர் தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘‘பா.ஜ.க. கூட்டணியின் இருந்து அ.தி.மு.க. வெளியேறியதைத் தொடர்ந்து ஸ்டாலின் பயந்துவிட்டார். எங்களை கேள்வி கேட்கும் அவரால், இந்தியா கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்பதை கூற முடியுமா? என்று சவால்விடுக்கும் வகையில் பேசினார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்று எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்தார்.