Share via:
மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சிக்காக டிக்கெட் வாங்கி குவிந்த ஏ.ஆர்.ரகுமான் ரசிகர்கள், அலைக்கழிக்கப்பட்டதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மன்னிப்பு கோரியுள்ளனர்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தொடர்ந்து திரைப்படங்களில் இசையமைத்து வந்தாலும், தனது ரசிகர்களுக்காக அடிக்கடி இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இதன் மூலம் வரும் பணத்தையும் பல்வேறு நற்காரியங்களுக்காக செலவிட்டு வருவது அவரது ரசிகர்கள் மத்தியில் நன்மதிப்பை உருவாக்கியுள்ளது.
அதன்படி கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற இருந்த ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி, தொடர் மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் அதற்காக வாங்கிய டிக்கெட்டுகளை அடுத்த நிகழ்ச்சியின் போது பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிப்பு வெளியானது.
இதைத்தொடர்ந்து மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், நேற்று (செப்.10) சென்னை ஈசிஆரில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளுடன் குவிந்த ரசிகர்களிடம் கார் பார்க்கிங், பைக் பார்க்கிங்கிற்காக குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்பட்டதால் வேதனையடைந்தனர். மேலும் புதிதாக டிக்கெட் வாங்கியவர்கள், ஏற்கனவே டிக்கெட் வாங்கியவர்கள் என அனைவரும் ஒரே நேரத்தில் நுழைவு வாயிலில் நுழைந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து டிக்கெட் வாங்கிய பலர் கூட்டநெரிசல் காரணமாக உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஏ.ஆர்.ரகுமான் ரசிகர்கள் மிகவும் அவதியடைந்து வெளியிலேயே காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதற்கு விழா ஏற்பாட்டாளர்கள் எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை என்று ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை இணையதளம் வாயிலாக பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் மறக்குமா நெஞ்சம் இசை கச்சேரியின் ஏற்பாட்டாளர்களான ஏசிடிசி நிறுவனம் எக்ஸ் தளத்தில் மன்னிப்பு கேட்டு பதிவு வெளியிட்டுள்ளது. அதில், திட்டமிட்டதை விட அதிக ரசிகர்கள் குவிந்ததால் குழப்பம் ஏற்பட்டதாகவும், ரசிகர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு முழு பொறுப்பு ஏற்பதாகவும் அந்நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
மழை காரணமாக இசை நிகழ்ச்சி தடைபட்டாலும், எப்படியும் நிகழ்ச்சியை பார்த்துவிடலாம் என்று கூடிய இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் ரசிகர்கள் அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் திரைத்துறையினர் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

