Share via:
லியோ திரைப்படத்தின் சிறப்புக்காட்சி விவகாரம் குறித்து இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட நடிகர்கள், நடிகைகள் நடித்து நாளை மறுநாள் (அக்.19) வெளியாக உள்ள திரைப்படம் லியோ. இத்திரைப்படம் நடிகர் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்ட நிலையில் படத்தை எப்படியாவது வெற்றியடைச் செய்திட வேண்டும் என்பதில் விஜய் ரசிகர்கள் முனைப்பாக உள்ளனர்.
இந்நிலையில் தமிழக அரசு லியோ திரைப்படத்திற்கான சிறப்புக்காட்சி அனுமதி அளித்து உத்தரவிட்டது. இருப்பினும் படத்தயாரிப்பு நிறுவனமாவ 7 ஸ்கிரீன் நிறுவனம், ‘‘அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும், காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.
இது குறித்த விசாரணை நேற்று (அக்.16) நீதிபதி அனிதா சுமந்த் முன்பு நடைபெற்றது. அப்போது வருகிற 19ம் தேதியன்று 6 காட்சிகளுக்கு அனுமதிகேட்ட நிலையில் 5 காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அரசு தலைமை வழக்கறிஞர், அதிகாலை 4 மணிக்காட்சிக்கு அனுமதி அளிப்பதில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகவும், ஏற்கனவே ரசிகர்கள் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் 4 மணி சிறப்புக் காட்சி குறித்த மனு மீதான விசாரணை இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இவ்வழக்கு முதல் வழக்காக விசாரிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.