Share via:
தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனாவை, ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மாளிகைக்கு அழைத்து திடீர் சந்திப்பு மேற்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையிலான கருத்து மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சட்ட மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையிலான பிரச்சினையை பூதாகரமாக்கியது.
இதன் தொடர்ச்சியாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தான் செல்லும் மற்றும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் எல்லாம் தமிழக அரசுக்கு எதிரான பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகிறார். இதெல்லாம் போதாது என்று ஆளுநர் என்.ரவியின் ராஜ்பவன் வாசல் முன்பாக ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். தமிழக அரசின் மெத்தனப் போக்கே இந்த தாக்குதலுக்கு காரணம் என்று மத்திய அரசிடம் புகார்கள் பறந்தன.
இந்நிலையில், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனாவை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு அழைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அப்போதைய சந்திப்பின் போது, சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து தலைமை செயலாளரிடம் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பினார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம் தொடர்பாக காவல்துறை விரிவாக விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.