Share via:
காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 7ம் தேதி இஸ்ரேல் -ஹமாஸ் போர் தொடங்கி இன்றளவும் நடைபெற்று வருகிறது. இதில் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் வான்வழி, தரைவழி என சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல்- ஹமாஸ் போர் விளைவாக இதுவரை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ள நிலையில் தற்போது ஒரு முக்கிய அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 195 பேர் பலியாகியுள்ளனர். 777 பேர் காயமடைந்துள்ளநிலையில் 120 பேர் மாயமாகியுள்ளனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. ஜபாலியா அகதிகள் முகாம் மீது கடந்த 2 நாட்களாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அகதிகள் முகாம் மீதான தாக்குதல் என்பது போர்க்குற்றத்துக்கு சமமானது என்று ஐ.நா. சபை கருத்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐ.நா. சபையின் மனித உரிமைகள் அமைப்பு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் அதிக எண்ணிக்கையில் பொது மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் அங்கு ஏற்பட்டுள்ள அழிவின் அளவையும் கருத்தில் கொண்டு அவை போர்க்குற்றங்களுக்கு சமமான தாக்குதல்கள் என்று தாங்கள் கருதுவதாக’’ தெரிவித்துள்ளது.

