Share via:
ஆந்திராவில் நின்று கொண்டிருந்த ரெயில் மீது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதிய விபத்தில் பலியான பயணிகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்ட கண்டகப்பள்ளி ரெயில் நிலையத்தில் விசாகப்பட்டினத்தில் இருந்து நேற்று (அக்.29) ராயகடா நோக்கி சென்ற பாசஞ்சர் ரெயில் கேபிள் பிரச்சினை காரணமாக இயக்கப்படாமல் நின்று கொண்டிருந்தது. அப்போது ரெயில்வே ஊழியர்கள் பிரச்சினையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அந்த வழியாக வந்த பலாசா எக்ஸ்பிரஸ் ரெயில், நின்று கொண்டிருந்த பாசஞ்சர் ரெயில் மீது பயங்கரமாக மோதி விபத்தை ஏற்படுத்தியது.
இந்த கோர விபத்தில் 3 ரெயில் பெட்டிகள் தடம்புரண்டன. இதில் அமர்ந்திருந்த ஏராளமான பயணிகள் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தனர். இதைத்தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள், போலீசார், மீட்புப்படையினர் என அனைவரும் இணைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில் இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், 18 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு, 22 ரெயில்கள் வேறு மார்க்கமாக திருப்பிவிடப்பட்டுள்ளதாக தென்னக ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரெயில்கள் வேறுமார்க்கமாக திருப்பிவிடப்பட்ட காரணமாக மற்ற பயணிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இவ்விபத்து குறித்து ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் நிலை மோசமாக உள்ளதாகவும், இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளதால் அச்சம் நிலவுகிறது.