Share via:
சென்னை வருகை தந்திருந்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இன்று காலை திடீரென்று சந்தித்து பேசியுள்ளனர்.
சென்னையில் உள்ள கடல்சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேற்று (அக்.27) நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பே குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சென்னைக்கு வந்திருந்தார்.
அதன்படி நேற்று முன்தினம் மாலை 6.50 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவர், ஆளுநர் மாளிகைக்கு சென்று அங்கு ஓய்வெடுத்தார். அப்போது நேற்று காலை 9 மணி முதல் 9.30 மணிவரையில் முக்கிய பிரமுகர்களை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, ஆளுநர் மாளிகையில் வைத்து சந்தித்தார்.
அந்த வகையில் முன்னாள் எம்.பி.யும் பழம்பெரும் நடிகையுமான வைஜெயந்திமாலா, நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா, நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், மதுவந்தி ஆகியோர் சந்தித்தனர். இந்த திடீர் சந்திப்பு திரையுலக மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்தில் நடைபெற்ற நவராத்திரி கொலு நிகழ்ச்சியில் அரசியல் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.