Share via:
2024ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணி விளையாட உள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனியை பிடிக்காத நபர்களே இருக்க முடியாது என்று கூறலாம். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணியின் கேப்டனாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் வருகிற டிசம்பர் மாதம் 18 அல்லது 19ம் தேதியில் நடக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலுமு ஒவ்வொரு அணியிலும் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் குறித்த பட்டியலை வருகிற நவம்பர் மாதம் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்ற காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐ.பி.எல். தொடரில் எம்.எஸ்.தோனி ஓய்வு பெறுவது குறித்து அவர் பேசும் போது, ரசிகர்களின் அன்புக்காக அடுத்த ஆண்டு விளையாட முயற்சி செய்வேன்’’ என்று அனைவரையும் குஷியாக்கினார்.
அதை மெய்ப்பிக்கும் வகையில் இன்று சென்னை பெங்களூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் எம்.எஸ்.தோனி கலந்து கொண்டு பேசினார். தொகுப்பாளர் பேசும்போது, தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார் என்று கூறிய உடனே தோனிக்கு அருகில் இருந்தவர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மட்டுமே தோனி ஓய்வு பெற்றுள்ளார் என்று சரி செய்தார். அதை ஏற்றுக் கொண்ட எம்.எஸ்.தோனியும் ஆமாம் என்று கூறினார்.
மேலும் காலில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது, ‘‘அறுவை சிகிச்சைக்கு பின்னர் காயத்தில் இருந்து விடுபட்டுவிட்டாலும் முழுமையாக குணமடையவில்லை. இருப்பினும் வருகிற நவம்பர் மாதத்திற்குள் குணமடைந்துவிடுவேன்’’ என்று தெரிவித்தார்.
அதாவது வருகிற 2024ம் ஆண்டு எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தூள் கிளப்பும் என்று ரசிகர்கள் இப்போதே சந்தோஷத்தில் குதிக்கத் தொடங்கிவிட்டனர்.

