Share via:
எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனுதாக்கல செய்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக அறிவிக்கப்பட்டு பின்னர் ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி வகித்தார். சண்டை, சமாதான பேச்சுவார்த்தை என பல்வேறு கட்டங்களை தொடர்ந்து முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வமும் பொறுப்பு வகித்தனர்.
அதைத்தொடர்ந்து கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 66 இடங்களை கைப்பற்றிய அ.தி.மு.க. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமியும், எதிர்க்கட்சித் துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் இருந்து வந்தனர்.
இதற்கிடையில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் வகித்து வந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பொறுப்பையும் நீக்க எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருகிறார். இது குறித்து சபாநாயகர் அப்பாபுவிடம் அ.தி.மு.க. தரப்பில் 10 முறைக்கும் மேல் வலியுறுத்தப்பட்டுவிட்டது. ஆனாலும் தற்போதும் கூட எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம்தான் அமர்ந்து உள்ளார்.
இந்நிலையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளது.
அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், ‘‘எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி விவகாரம் தொடர்பாக சபாநாயகர் அப்பாபுவிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த பயனுமில்லை. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவர், எதிர்க்கட்சி துணைத் தலைவராக எவ்வாறு செயல்பட முடியும்? தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக அ.தி.மு.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.பி.உதயகுமாரை அறிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மனு மீதான விசாரணை அடுத்த வாரம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.