Share via:
பெட்ரோல் குண்டுவீச்சு தொடர்பாக தீவிர விசாரணை நடத்துமாறு ஆளுநரின் துணைச் செயலாளர் காவல்துறைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடியான கருக்கா வினோத், நேற்று பிற்பகல் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசி பரபரப்பை ஏற்படுத்தினார். அதைத்தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கருக்கா வினோத்தை கைது செய்து, கிண்டி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் சம்பவம் நடந்த பகுதியை ஆய்வு செய்து ஆளுநர் ஆர்.என்.ரவியை 40 நிமிடம் சந்தித்து விவரமான விளக்கம் அளித்துள்ளார்.
இதற்கிடையில் பெட்ரோல் குண்டுவீச்சுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், பெட்ரோல் குண்டு வீச வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு கிடையாது என்றும் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி காட்டமாக தெரிவித்தார்.
இந்நிலையில் பெட்ரோல் குண்டுவீச்சு தொடர்பாக தீவிர விசாரணை நடத்துமாறு ஆளுநரின் துணை செயலாளர் டி.செங்கோட்டையன், காவல்துறைக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த புகார் கடிதத்தில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மூலமாக ஆளுநருக்கு தொடர் அச்சுறுத்தல்கள் வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.