Share via:
பெட்ரோல் குண்டுவீச்சுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், பெட்ரோல் குண்டு வீச வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு கிடையாது என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி காட்டமாக தெரிவித்துள்ளார்.
நேற்று (அக்.25) தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட பிரபல ரவுடி கருக்கா வினோத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதற்கிடையில் கருக்கா வினோத்திடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்தும் போலீசார் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அரசு இயற்றும் மசோதாக்களுக்கு கையெழுத்து இடாமல் நிலுவையில் வைப்பது, அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்களை ஆளுநர் முன்வைத்து வருகிறார். இதற்கிடையில் திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர், சுதந்திர போராட்ட வீரர்களுக்கு உரிய மரியாதை இல்லை என்று பேசியது கடும் கண்டனத்திற்குள்ளானது. இந்தசூழலில் தான் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுவீசப்பட்டுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசும்போது, ‘‘தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டினார். ஒரு எதிர்க்கட்சித் தலைவரை போல ஆளுநர் ஊர், ஊராக சென்று பிரசாரம் மேற்கொண்டு வந்தார். யாரோ ஒரு மன நோயாளி பெட்ரோல் குண்டு வீசியதற்கு தமிழக அரசு எப்படி பொறுப்பேற்க முடியும்? ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியதாக கைது செய்யப்பட்டவர் ஏற்கனவே சிறையில் இருந்து வெளியேவந்தவர்தான்.
இச்சம்பவம் மூலம் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேறு யாரோ செய்த சதியாகத்தான் கருதுகிறோம் என்று கூறிய அமைச்சர் ரகுபுதி, தி.மு.க. ஆட்சி நடத்தும் தமிழ்நாட்டில் பெட்ரோல் குண்டுவீச வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு இல்லை என்று காட்டமாக பேசினார். மேலும் பெட்ரோல் குண்டுவீச்சுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது சாலையில் நடந்த சம்பவம் என்று தெரிவித்துள்ளார்.