Share via:
பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் சந்தித்து பேசினார்.
சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடியான கருக்கா வினோத், நேற்று பிற்பகல் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிபரபரப்பை ஏற்படுத்தினார். அதைத்தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கருக்கா வினோத்தை கைது செய்து, கிண்டி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
கருக்காவினோத்திடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், கடந்த 2022ம் ஆண்டு பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசியதற்காக கருக்காவினோத் சிறையில் இருந்த அவரை விடுவிக்க ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்ற ஆத்திரத்தில் பெட்ரோல் குண்டுவீசியதாக தெரியவந்துள்ளது. விசாரணைக்கு பின்னர் கருக்காவினோத் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் சம்பவம் நடந்த பகுதியை ஆய்வு செய்த பின்னர் இது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.
மேலும் இந்த சந்திப்பின் போது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று சென்னை வர உள்ள நிலையில் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.