Share via:
தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.வேணு மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.வேணு உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (அக்.21) காலமானார்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பன்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கே.வேணு தி.மு.க.வின் முன்னாள் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தார். அதோடு கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வந்தார்.
அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ‘‘திருவள்ளூர் மாவட்டத்தில் கழகத்தைக் கட்டிக் காத்த சகோதரர் கும்மிடிப்பூண்டி கி.வேணு மறைந்தார் என்ற துயரச் செய்தி கேட்டு துடிதுடித்துப் போனேன் என்று தெரிவித்தார்.
கும்மிடிப்பூண்டி என்றாலே வேணுதான் என்று சொல்லுமளவுக்கு, அந்தத் தொகுதி மக்களிடமும் ஒன்றுபட்ட திருவள்ளூர் மாவட்ட மக்களிடமும் அன்பு காட்டி நற்பெயர் பெற்ற அவரை இன்று இழந்து தவிக்கிறோம் என்று எண்ணுகையில் கண்களில் கண்ணீர் ததும்புகிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் கழகத்தின் அடிமட்டத்தில் இருந்து உயர்ந்து, ஒன்றியக் கழகச் செயலாளராக, மாவட்டக் கழகச் செயலாளராக, இருமுறை சட்டமன்ற உறுப்பினராக, கழக உயர்நிலைச் செயல்திட்டக் குழு உறுப்பினராக உயர்ந்து கொண்டே சென்றவர் கே.வேணு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவுகூர்ந்தார்.
அவரை கவுரவிக்கும் வகையில் கடந்த 2021-ம் ஆண்டு கழக முப்பெரும் விழாவில் அவருக்குக் கலைஞர் விருது வழங்கி வாழ்த்தினேன் என்று கூறிய மு.க.ஸ்டாலின், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அவரது பேத்தியின் திருமண விழாவைத் தலைமை தாங்கி நடத்தி வைத்துப் பேசினேன் என்று வேணுவுடனான தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.