Share via:
தெலுங்கானா சட்டமன்ற தேர்தலுக்கான பிரசார பீரங்கியாக மாறிய ராகுல்காந்தியை தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்று அவரின் பிரசாரத்தை ஆர்வமுடன் கேட்டனர்.
சத்தீஸ்கர், மிசோரம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வருகிற நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் நிச்சயமாக அனைத்து மாநிலங்களிலும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் அதிரடியாக தேர்தல் பிரசாரத்தில் குதித்துள்ளன.
அந்த வகையில் தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தி மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் நேற்று (அக்.19) தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர். திறந்தவெளி வேனில் நின்றபடி ராகுல்காந்தி பேசிக் கொண்டிருந்த போது காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கேட்டுக் கொண்டனர்.
அவர் பேசும்போது, ‘‘ராஜஸ்தானில் இலவச சிகிச்சை வாக்குறுதி அளித்தபடி இன்று அங்கு ரூ.25 லட்சம் வரை இலவசம். அதேபோல் விவசாயக்கடனை தள்ளுபடி செய்ததோடு, நெல்லுக்கு அதிக விலையும் கிடைத்து வருகிறது. கர்நாடகாவில் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத் திட்டம், ஒவ்வொரு மாதமும் பெண்கள் மற்றும் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் வந்து சேர்கிறது என்று தங்களது சாதனைகளை பட்டியலிட்டுக் கொண்டிருந்தார்.
அதையே தெலுங்கானாவில் சொல்கிறோம். உங்கள் உரிமை எதுவோ, அதை நாங்கள் உத்தரவாதத்துடன் தருகிறோம். கர்நாடகா, இமாச்சலபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் என எதுவாக இருந்தாலும் சரி… நாங்கள் சொன்னதை தான் செய்வோம்… செய்வதைத்தான் சொல்வோம் என்ற ரீதியில் பிரசார உரையாற்றினார்.
தொடர்ந்து பேசிய அவர், தெலுங்கானா மக்களின் கனவு, சமூக நீதி கிடைக்க வேண்டும் என்பதாக இருக்கிறது. தெலுங்கானாவில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். ஆனால் அவர்களின் எண்ணிக்கை அமைச்சகத்தில் வெறும் 3 சதவீதம் மட்டுமே உள்ளது என்று குற்றம்சாட்டி பேசினார். சாதி வாரி கணக்கெடுப்பு பற்றி பேசும் போது மவுனம் காக்கும் அவர்கள் எப்படி சமூக நீதியை வழங்குவார்கள்? என்று மக்கள் முன்பு கேள்வி எழுப்பினார்.