Share via:
சென்னை உயர்நீதிமன்றத்தில் உடல்நலத்தை காரணம் காட்டி ஜாமீன் மனு தாக்கல் செய்த செந்தில் பாலாஜியின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற செந்தில் பாலாஜி தனது உடல்நலத்தை காரணம் காட்டி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
இவ்வழக்கு சென்னை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. அதன்படி கடந்த 8 முறையாக அவரது காவல் நீட்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதைத்தொடர்ந்து ரத்தக்கொதிப்பு உள்ளிட்ட காரணங்களால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. இம்மனு மீது தீர்ப்பு வழங்கிய நீதிபதி கூறும்போது, ‘‘செந்தில் பாலாஜியின் சகோதரர் தலைமறைவாக இருப்பதால் அவர் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. எனவே மருத்துவ காரணங்களுக்காகக் கூட செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று கூறிய அவர், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என உத்தரவு பிறப்பித்தார்.