Share via:
ஒரு வருடத்திற்கு 2 எல்.பி.ஜி. சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்ற திட்டத்தை வருகிற தீபாவளி முதல் தொடங்க உள்ளதாக உத்தரபிரதேச முதல்வர் அறிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத் அம்மாநிலத்தில் முதலமைச்சராக இருந்து வருகிறார். இம்மாநிலத்தின் தேர்தல் அறிக்கையின் போது பெண்களுக்கு ஒரு வருடத்திற்கு 2 இலவச எல்.பி.ஜி. சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இத்திட்டம் தொடர்பான் முன்மொழிவு குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில் அம்மாநில தலைமை செயலாளர் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார். அதன்படி உஜ்வாலா திட்டத்தின் கீழ், வருகிற தீபாவளி பண்டிகையன்று அரசு பயனாளிகளுக்கு ஒரு இலவச சிலிண்டரும், ஹோலி பண்டிகையை முன்னிட்டு மற்றொரு இலவச சிலிண்டரும் வழங்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இலவச சிலிண்டர் வழங்கும் திட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்தை செயல்படுத்த பட்ஜெட்டில் ரூ.3,301.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.