Share via:
போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயற்சி செய்த கொலையாளியை பெண் போலீஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த துணிகர சம்பவம் பல்லடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கடந்த 3ம் தேதி கள்ளக்கிணறு குறைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது வீட்டின் அருகே வெங்கடேஷ், செல்லமுத்து, விஷால் என்கிற சோனை முத்தையா ஆகியோர் மது குடித்துக் கொண்டிருந்தனர்.
இது குறித்து நடந்த வாக்குவாதத்தின் போது, மோகன்ராஜ், அவரது தாயார் புஷ்பவதி, சித்தி ரத்தினம்மாள், பெரியப்பா மகன் செந்தில்குமார் ஆகியோரை மதுகுடித்துக் கொண்டிருந்த 3 பேரும் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடினர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட மோகன்ராஜிடம், கொலையாளி வெங்கடேஷ் டிரைவராக வேலை பார்த்தவர் என்பதும், வெங்கடேஷின் நடவடிக்கைகள் சரியில்லாததால் மோகன்ராஜ் அவரை பணியில் இருந்து நீக்கினார் என்பதும் தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து கொலையாளிகளை பிடித்த அமைக்கப்பட்ட 5 தனிப்படை போலீசார் முதலில் செல்லமுத்துவை கைது செய்தனர். செல்லமுத்து தப்பிக்க முயற்சி செய்த கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு கோவை மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இதற்கிடையில் தலைமறைவு குற்றவாளிகள் 2 பேரும் நேற்று முன்தினம் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் 2 பேரும் மாவட்ட காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை மாதப்பூர் ஊராட்சி தொட்டம்பட்டி பகுதியில் மறைத்து வைத்திருப்பதாக கொலையாளி வெங்கடேஷ் போலீசாரிடம் தெரிவித்தான். எனவே ஆயுதங்களை பறிமுதல் செய்ய அதிகாலை 4.45 மணியளவில் போலீஸ் துணை சூப்பிரண்டு சவுமியா மற்றும் போலீசார் வெங்கடேஷை சம்பவ இடத்திற்கு வேனில் அழைத்து சென்றனர்.
சம்பவ இடத்திற்கு வெங்கடேஷ் போலீஸ் பாதுகாப்புடன் வேனில் இருந்து இறக்கிவிட்ட போது, வெங்கடேஷ் போலீசார் கண்களில் மண்ணை தூவிவிட்டு தப்பிச் செல்ல முயற்சித்தான். அப்போது துரிதமாக செயல்பட்ட போலீஸ் அதிகாரி சவுமியா, வெங்கடேஷிடம் ‘ஓடாதே சுட்டுவிடுவேன்’ என்று எச்சரித்தார்.இதை கண்டுகொள்ளாத வெங்கடேஷ் தொடர்ந்து ஓட்டம்பிடிக்கவே, சவுமியா வெங்கடேஷின் காலில் சுட்டுப்பிடித்தார்.
2 கால்களிலும் படுகாயமடைந்த வெங்கடேஷ் தற்போது பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளான். இதற்கிடையில் வெங்கடேஷ் போலீஸ்காரர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில், சிலர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.