Share via:
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 7 பேரை தமிழக அரசு அதிரடியாக பணியிடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் சமீப நாட்களாக ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழக அரசு இடமாற்றம் செய்துள்ளது. இது குறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீதான உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதில், கூட்டுறவு உணவு மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளராக பணியாற்றி வந்த ஜெகநாதன், வணிகவரித்துறை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அபூர்வா வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளராக பணியாற்றி வந்தார்.
வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண் மற்றும் உழவர்நலத்துறை செயலாளராக இருந்து வந்து சமயமூர்த்தி தற்போது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை செயலாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். விழிப்பு பணி ஆணையர் பதவி மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையராக பதவி வகித்து வந்த கோபால் தற்போது கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்து வந்த ரமேஷ் சந்த் மீனா தற்போது திட்டங்கள் மற்றும் மேம்பாட்டுத்துறையின் கூடுதல் தலைமை செயலாளராகவும், தமிழ்நாடு கைவினை மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனரான சோபனா எழுதுபொருள் அச்சுத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இறுதியாக சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணைய தலைமை செயல் அதிகாரியாக இருந்து வந்த கவிதா ராமு தற்போது தமிழ்நாடு கைவினைகள் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.