Share via:
காங்கிரஸ் கட்சி சார்பில் தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்தியப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
வருகிற நவம்பர் மாதம் 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதன் காரணமாக அரசியல் களம் சூடுபிடித்து தேர்தல் யுக்திகளை கையாண்டு வருகின்றனர். மேலும் தேசிய கட்சிகளான பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட உள்ள வேட்பாளர்களை தயார் செய்து படிப்படியாக வெளியிட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் அதன்படி, மத்திய பிரதேசத்தில் 144, சத்தீஸ்கரில் 30 மற்றும் தெலங்கானாவில் 55 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
சிந்த்வாரா தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வருமான கமல்நாத் போட்டியிட உள்ளார். அதேபோல், மற்றொரு முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங்கின் சகோதரர் லக்ஷ்மண் சிங் சச்சௌரா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திக்விஜய் சிங்கின் மகன் ஜெய்வர்தன் சிங், ரகோகர் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.
மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை பாஜக தனது வேட்பாளராக நிறுத்தியுள்ள நிலையில், விக்ரம் மஸ்தலை புத்னி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
சத்தீஸ்கரில், துணை முதல்வரான டி.எஸ்.சிங் தியோ அவரது கோட்டை என்று சொல்லப்படும் தொகுதியான அம்பிகாபூர் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அம்மாநில முதல்வரான பூபேஷ் பாகல் படான் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சத்தீஸ்கரில் அறிவிக்கப்பட்ட 30 வேட்பாளர்களில் 14 பேர் எஸ்டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ள நிலையில், முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில், மூன்று பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தெலங்கானா:
தெலங்கானா சட்டமன்ற தேர்தலுக்கான 55 வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. கோடங்கல் தொகுதியில் அனுமுலா ரேவந்த் ரெட்டியும், ஹுசூர்நகர் தொகுதியில் உத்தம் குமார் ரெட்டியும், தாசரி சீதக்கா முலுகுவிலும் போட்டியிடுகின்றனர். மைனம்பள்ளி ரோஹித் ராவ் மேடக், மைனம்பள்ளி ஹனுமந்த் ராவ் மல்காஜ்கிரியில் போட்டியிடும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது முதல் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக பிரசாரத்திற்கு வேட்பாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் தயாராகி வருகின்றனர்.