Share via:
மத்திய அரசின் ஆபரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் சிக்கித்தவித்த 212 இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்பினர்.
இஸ்ரேல்- பாலஸ்தீனம் மோதலுக்கு இடையே சிக்கியுள்ள 18,000 இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய் என்ற திட்டம் குறித்த அறிவிப்பை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டார்.
இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையேயான போர் இன்று 7வது நாளாக நடைபெற்று வருகிறது. பாலஸ்தீனத்தி காசா பகுதி தங்களுடைய நாட்டின் எல்லை என்று இஸ்ரேலும், பாலஸ்தீனமும் உரிமை கொண்டாடி வருவதால் பல ஆண்டுகளாக இந்த பிரச்சினை நீடித்து வருகிறது.
இதைத்தொடர்ந்து 4 முறை போர் நடைபெற்றுள்ள நிலையில் தற்போது கடந்த 6 நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலை குறிவைத்து ஹமாஸ் அமைப்பினர் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதை எதிர்த்து இஸ்ரேல் ராணுவத்தினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த மோதலில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், அங்கு சிக்கியுள்ள 18 ஆயிரம் இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக நேற்று (அக்.12) இஸ்ரேலுக்கு முதல் மீட்பு விமானம் அனுப்பப்பட்டது. அதில் முதல்கட்டமாக 212 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதில் 21 பேர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
212 பேரையும் ஏற்றிக் கொண்டு முதல் மீட்பு விமானம் டெல்லி வந்தடைந்த போது அவர்களை மத்திய மந்திரி ராஜீவ்சந்திரசேகர் நேரில் சென்று வரவேற்றார். மேலும் இஸ்ரேலில் சிக்கியுள்ள எஞ்சிய இந்தியர்களை மீட்கும் பணியை மத்திய அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது. அடுத்த மீட்பு விமானத்திற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.