Share via:
அமைச்சர் அன்பில் மகேஷ் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் ஆசிரியர்கள் நடத்த இருந்த போராட்டத்தை ரத்து செய்வதாக டிட்டோஜாக் ஆசிரியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்துவது, எண்ணும் எழுத்தும் திட்டடத்தை கைவிடுவது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடுதொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களை கூட்டு நடவடிக்கைக் குழு இன்று சென்னையில் போராட்டம் நடத்தப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதில் உடன்பாடு ஏற்படாததால் திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும் என்றும் ஆசிரியர் சங்கங்கள் அறிவித்தன. அதைத்தொடர்ந்து நேற்று காலை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழைப்பு விடுத்த நிலையில் காலை யாரும் வரவில்லை. அதன் பின் மாலை அமைச்சரின் முகாமில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அப்போது ஆசிரியர்கள் சங்கத்தினர் முன்வைத்த கோரிக்கைகள் சிலவற்றை அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார் என்று கூறப்படும் நிலையில், போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஆசிரியர்கள் சங்கங்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
அதன்படி 30 அம்ச கோரிக்கைகளில் 11 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி அளித்துள்ளதால், போராட்டம் கைவிடப்படுவதோடு, அதற்கு பதிலாக சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே விளக்கக் கூட்டம் நடைபெறும் என்று டிட்டோஜாக் நிர்வாகிகள் தாஸ் மற்றும் வின்சென்ட் பால்ராஜ் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்தனர்.