Share via:
ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.9.40 கோடி ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார்.
சென்னையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டனர்.
சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்களை வாங்கி குவித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்தனர். அவர்களை கவுரவிக்கும் விதமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ.9.40 கோடி காசோலைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
அதன்படி தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் ராஜேஷ் ரமேஷ் 1 தங்கம், 1 வெள்ளி பதக்கங்களை வென்றார். 2 வெள்ளப்பதக்கங்களை வென்ற சுபா வெங்கடேசன், 2 வெள்ளி மற்றும் 1 வெண்கல பதக்கங்களை வென்ற வித்யா ராம்ராஜ், 1 வெண்கலப்பதக்கம் வென்ற பிரவீன் சித்ரவேல், தங்கம் வென்ற பிரதிவிராஜ் தொண்டைமான் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மேலும் 1 தங்கம் மற்றும் 1 வெள்ளி பதக்கங்களை வென்ற சவ்ரவ் கோஷல், 2 தங்கப்பதக்கங்களை வென்ற ஹரிந்தர் சிங் சிந்து, அபய் 1 தங்கம், 1 வெள்ளி வென்ற அபய் சிங், 1 தங்கம் மற்றும் 1 வெள்ளி வென்ற தீபிகா பல்லிகல் கார்த்திக் மற்றும் 1 வெண்கலப்பதக்கம் வென்ற ஜோஷ்னா சின்னப்பா ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டனர்.
மேலும் வெள்ளிப்பதக்கம் வென்ற ராம்குமார் ராமநாதன், வி.ஆனந்த்குமார், ஆர்த்தி கஸ்தூரிராஜ், கார்த்திகா, டி.குகேஷ் பிரக்ஞானந்தா, ஆர்.வைஷாலி, பி.சவிதா ஸ்ரீ, சாய் கிஷோர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய 20 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கவுரவிக்கப்பட்டு ரூ.9.40 கோடி ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் பதக்கங்களை வென்ற வீரர் மற்றும் வீராங்கனைகள் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் குழுபுகைப்படம் எடுத்துக் கொண்டனர்.