Share via:
உடல் உறுப்பு தானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி அழைப்பு விடுத்துள்ளார்.
உடல் உறுப்புதானத்தில் முன்னிலை வகிக்கும் தமிழ்நாட்டில் அதற்கான விழிப்புணர்வும் அதிகளவில் இருந்து வருகிறது. இதனை ஊக்குவிக்கும் வகையில், உடல் உறுப்புதானம் செய்பவர்களின் இறுதிச்சடங்கை அரசு மரியாதையுடன் செய்வோம் என்று தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு நடைமுறைப்படுத்தியும் வருகிறது. இதனால் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, பொது மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசும் போது, ‘‘தமிழ்நாட்டில் மட்டும் 6,025 பேர் சிறுநீரகத்துக்காக பதிவு செய்துவிட்டு காத்திருக்கிறார்கள். கல்லீரலுக்காக 443 பேரும், இதயதுக்காக 75 பேரும், நுரையீரலுக்காக 62 பேரும் காத்திருக்கிறார்கள். நடப்பாண்டை பொறுத்தவரையில் இதுவரை 128 பேர் மட்டுமே உடல்உறுப்புதானம் செய்துள்ளனர். இதன் மூலம் 733 பேர் பயனடைந்துள்ளனர். எனவே உடல் உறுப்புதானம் செய்ய பொதுமக்கள் மனமுவந்து முன்வர வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மண் தின்னும் உடல் பாகங்களை தேவைப்படும் மனிதர்களுக்கு தானமாக தந்து இறந்தும் இறவாமல் வாழ்வதும் சாதனைதான் அல்லவா?