Share via:
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் திடீரென்று சந்தித்து பேசியுள்ளார்.
ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.300 கோடிக்கும் மேல் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டு தற்போது ராஜமஹேந்திரவரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளரும், சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நாரா லோகேஷ் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது மத்திய அமைச்சரும் தெலங்கானா பா.ஜ.க. தலைவருமான கிஷன் ரெட்டியும் உடன் இருந்தார்.
இந்த சந்திப்புக்கு பிறகு நாரா லோகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள சிறையில் சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட்டிருப்பது குறித்தும், பழிவாங்கல் நடவடிக்கைக்காக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியை பயன்படுத்துவதாகவும் தெரிவித்தேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.
ராஜமஹேந்திரவரம் சிறையில் சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கே சத்யநாராயணா என்ற விசாரணைக் கைதி டெங்கு பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இதே நிலை சந்திரபாபு நாயுடுவுக்கும் ஏற்பட சதித்திட்டம் தீட்டப்படுவதாக நாரா லோகேஷ் குற்றம்சாட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.