Share via:
மறைந்த டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் இனி ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் 110வது விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டு உரை நிகழ்த்தினார்.
அதன்படி தஞ்சாவூர் ஈச்சங்கோட்டையில் செயல்பட்டு வரும் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், இனி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி என பெயர் மாற்றம் செய்யப்படும் என்று அறிவித்தார்.
மேலும் வேளாண் பல்கலைக்கழகத்தில் இளம் வேளாண்மை மற்றும் மரபியல் பாடப்பிரிவில் அதிக மதிப்பெண் பெற்று முன்னிலை பெறும் மாணவர்கள் கவுரவிக்கப்படுவார்கள். அவர்களுக்கு ஆண்டுதோறும் எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் விருதுகள் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அதேபோல் சட்டப்பேரவையில் வேடசந்தூர் எம்.எல்.ஏ. காந்திராஜன் எழுப்பிய கேள்விக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்தார். அவர் பேசும்போது, கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் போதுமான டிரைவர் கண்டக்டர் இல்லாத காரணத்தாலேயே நிறுத்தப்பட்ட என்று தெரிவித்தார்.
மேலும் 600 டிரைவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மற்ற போக்குவரத்துக் கழகத்திலும் புதிய டிரைவர்கள், கண்டக்டர்களை நியமிக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். அதன் பின்னர் நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் மீண்டும் பேருந்துகள் படிப்படியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்தார்.