Share via:
இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவையின் 2வது நாளான இன்று அவையில் இஸ்லாமிய சிறைக்கைதிகள் விடுதலை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போதைய விவாதத்தில் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட அரசாணையால் இஸ்லாமியர்கள் முன்கூட்டியே விடுதலையாவது தடைபடுவதாக இஸ்லாமிய அமைப்புகள் கூறுவதாக பேசினார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமியர்கள் சிறையில் வாடிக் கொண்டிருப்பவர்களை வயது மூப்பு, உடல்நலக்குறைவு, குடும்ப வேண்டுகோளை முன்வைத்து கருணை அடிப்படையில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கைகளை முன்வைத்தார்.
அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசும்போது, ‘‘இஸ்லாமிய கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை என்ற தோற்றத்தை அ.தி.மு.க.தான் செய்து வருகிறது. அது போலியானது. அ.தி.மு.க. தனது 10 ஆண்டு கால ஆட்சி காலத்தில் அவர்களை ஏன் விடுதலை செய்யவில்லை? அப்போது கண்ணை மூடிக் கொண்டிருந்ததற்கு என்ன காரணம்? என்று கேள்வி எழுப்பினார்.
அதைத்தொடர்ந்து தங்களுக்கு பேச வாய்ப்பும் நேரமும் தரவில்லை என்று குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது, ‘‘முதலமைச்சர் கேள்விக்கான பதிலை அளிக்காமல், இஸ்லாமியர்கள் மீது அ.தி.மு.க.வுக்கு ஏன் திடர் பாசம் என்று கேள்வி எழுப்புகிறார். மேலும் அ.தி.மு.க. அரசு இஸ்லாமியர்களுக்காக ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடவில்லை’’ என்று கூறுகிறார் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் முதலமைச்சர் இவ்வளவு கோவப்படுவதற்கு என்ன காரணம்? 25 ஆண்டுகளாக சிறையில் வாடிக் கொண்டிருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று நாங்கள் நல்ல எண்ணத்தோடு கேட்டதற்கு அவருக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது என்றும், இவர்கள்தான் சிறுபான்மை பாதுகாவலர்களா?’’ என்றும் கேள்வி எழுப்பினார்.