Share via:
சிறு வணிகர்கள் பயனடையக் கூடிய வகையில் சமாதான திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று அறிவிப்பு வெளியிட்டார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்றைய நிகழ்ச்சியில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உறுப்பினர்கள் முன்பு உரை நிகழ்த்தினார்.
அவர் பேசும்போது, ‘‘50 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் உள்ள தொகைக்கான வணிக வரி, வட்டி, அபராதத் தொகை தள்ளுபடி செய்யப்படும். இதன் மூலம் 95 ஆயிரம் சிறு வணிகர்கள் பயனடைய உள்ளனர். மேலும் ரூ.10 லட்சம் வரி நிலுவை வைத்துள்ள வணிகர்களுக்கு அதில் 20 சதவீதம் வரியை செலுத்தினால் போதும் என்று தெரிவித்துள்ளார்.
நிலுவையில் உள்ள வழக்குகளால் வணிகவரித்துறையில் பணிச்சுமை அதிகரித்துள்ளது. இதனால் வணிகர்களும் கூட சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அதேசமயம் அரசுக்கு வரக்கூடிய வருவாயும் வராமல் தாமதமாகிறது. எனவே நிலுவையில் உள்ள வரியை வழங்குவதற்கு அரசு சலுகை வழங்க வேண்டும் என்று வணிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
வணிகர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை வசூலிக்க சமாதான திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இத்திட்டத்தின் மூலம் வணிகர்கள், வணிகவரித்துறை இடையிலான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பழைய நிலுவை தொகையை சமாதான திட்டம் மூலம் எளிய முறையில் வசூல் செய்ய முடியும் என்று தெரிவித்தார்.
மேலும் வணிகர்கள் நிலுவைத் தொகையை 4 வரம்புகளுக்குள் செலுத்தலாம். தமிழக வரலாற்றில் வணிகர்களுக்கு இத்தகைய சலுகை வழங்கப்படுவது முதல் முறை என்று தெரிவித்த அவர், வருகிற 16ம் தேதி முதல் இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என்றும், வருகிற 2024ம் ஆண்டு பிப்ரவரி 15ம் ததி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவித்துக் கொண்டார்.
