Share via:
தெலுங்கானாவில் வருகிற அக்டோபர் 15ம் தேதி தேர்தல் அறிக்கையை வெளியிடும் சந்திரசேகரராவ் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளதால் அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் வருகிற நவம்பர் மாதம் 30ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று நேற்று (அக்.9) இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ்குமார் அறிவித்திருந்தார்.
மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 7ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. இவற்றில் பதிவாகும் வாக்குகள் வருகிற டிசம்பர் மாதம் 3ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் வெளியாகும் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
அதன்படி தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் களம் களைகட்டியுள்ளது. தெலுங்கானா மாநிலம் கடந்த 2014ம் ஆண்டு ஆந்திராவில் இருந்து பிரிந்த போது அதற்கு முக்கிய பங்கு வகித்த சந்திரசேகர் ராவ் கட்சி 63இடங்களை கைப்பற்றி முதன்முறையாக தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சியை அமைத்தது. அந்த வெற்றி 2018ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தொடர்ந்தது.
இந்நிலையில் 3வது முறையாக வருகிற நவம்பர் மாதம் 30ம் தேதி நடைபெற உள்ள தேர்தலிலும் வெற்றி பெற சந்திரசேகர்ராவ் தனக்கு ராசியான இடமான ஹீஸ்னாபாத்தில் தேர்தல் பிரசாரத்தை வருகிற அக்டோபர் 15ம் தேதி தொடங்க உள்ளார். அன்று காலை தேர்தல் அறிக்கையை வெளியிடும் அவர், வழக்கம் போல காமரெட்டி தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
இதற்கான பொதுக்கூட்ட ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டு வரும் நிலையில், அன்றைய தினமே வேட்பாளர்களையும் அறிமுகம் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.