Share via:
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செவிலியர்கள் இன்று காலை குண்டுகட்டாக போலீசார் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தேனாம்பேட்டையிடல் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எம்.ஆர்.பி. தொகுப்பூதிய செவிலியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கும் தேவைக்கும் ஏற்ப புதிய நிரந்தரப் பணியிடங்களை உருவாக்குவது, ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்த 500 செவிலியர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சென்னை டி.எம்.எஸ். வளாகத்திற்கு வந்த போலீசார், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி செவிலியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி அவர்களை குண்டுகட்டாக போலீஸ் வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர். வலுக்கட்டாயமாக செவிலியர்களை இழுத்துச் சென்ற பெண் காவலர்கள் அவர்களை போலீஸ் வண்டிக்குள் அடைத்தனர்.
இதனால் சென்னை தேனாம்பேட்டை பகுதியே சிறிது நேரம் போர்க்களம் போல் காட்சியளித்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இடை நிலை ஆசிரியர்கள் குண்டுகட்டாக போலீசார் கைது செய்யப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் மறுபடியும் இப்படியொரு கைது நடவடிக்கையா என்று சமூக வலைதளங்களில் காரசார விவாதம் நடைபெற்று வருகிறது.