Share via:
அரியலூர் மாவட்டம் பட்டாசு விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே திருமானூரைச் சேர்ந்த அருண் என்பவர் விரகாலூர் கிராமத்தில் சொந்தமாக பட்டாசு ஆலை ஒன்றை நடத்தி வருகிறார். இங்கு 50க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறார்கள்.
அடுத்த மாதம் (நவம்பர்) தீபாவளி பண்டிகை என்பதால் அதிகளவில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணியில் தொழிலாளர்களும் முழுவீச்சில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டதில் 9 பேர் உயிரிழந்த நிலையில், 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இனி இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வேலையை தீவிரப்படுத்தும் போது இது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது.
இந்நிலையில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும் விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
