Share via:
தமிழக சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டப்பேரவை 6 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். இதற்கு முன்னர் மார்ச் மாதம் 20ம் தேதி தொடங்கி ஏப்ரல் 21ம் தேதி நிறைவு பெற்றது. அப்போது நிதி நிதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அரசு துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதமும் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் முதலில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களான லியாவுதீன் சேட், பழனியம்மாள், ஆண்டமுத்து ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதோடு பஞ்சாப் முன்னாள் மத்திய மந்திரி பிரகாஷ் சிங் பாதல், தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளராக இருந்து வந்த சபாநாயகம், கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோரின் மறைவுக்கு, சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இன்று (அக்.9) கூடியுள்ள சட்டசபை கூட்டத்தொடரில் நடப்பு ஆண்டிற்கான 2023& 2024 கூடுதல் செலவினங்கள் தொடர்பான மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதோடு சேர்த்து காவிரி விவகாரம் தொடர்பாக சட்டசபையில் அனைத்துக்கட்சிகள் ஆதரவுடன் இன்று தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
மேலும் உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையை ஏற்று தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர வேண்டும் என கர்நாடக அரசை உத்தரவிட வேண்டும் என்பது குறித்த தனித்தீர்மானமும் இன்றைய கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
