News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தான் வேலை செய்யும் கடைக்கான பொம்மைகளை குடோனுக்குள் அடுக்கிக் கொண்டிருந்த 18 வயதான சந்தியா என்ற இளம்பெண்ணை ஒரு தலையாக காதலித்த 17 வயது சிறுவன் அரிவாளால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்கிறான். எங்கு செல்கிறது இந்த சமூகம் என்ற கேள்வியோடு இந்த கொலையும் அதன் பின்னணித் தகவல்களும் உங்களுக்காக.

 

நெல்லைக்கு மற்றொரு பெயர் என்று சொல்கிற அளவுக்கு உலகளவில் பிரபலமான இருட்டுக்கடை அல்வா கடையில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு பேன்சி ஸ்டோரில் சந்தியா என்ற 18 வயது இளம் பெண் 7 ஆயிரம் ரூபாய் மாத சம்பளத்திற்கு வேலை செய்துள்ளார். திருநெல்வேலி அருகில் உள்ள திருப்பணி கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன்& சுப்புலெட்சுமி தம்பதியருக்கு 3 மகள்கள். கடைசி மகள்தான் கொல்லப்பட்ட சந்தியா. 12ம் வகுப்புவரை படித்துவிட்டு குடும்ப வறுமையை போக்க 7 ஆயிரம் ரூபாய் மாத சம்பளத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். தன்னுடன் படித்த தோழிகள் கல்லூரிக்கு செல்லும் வேளையில் தான் மட்டும் வேலைக்கு செல்கிறோம் என்கிற வேதனையில்லாமல் குடும்பத்திற்காக வாழ்ந்திருக்கிறாள் சந்தியா.

 

சந்தியாவின் சகோதரியான கோகிலா அருகில் உள்ள சூர்யா கேஸ் என்கிற கடையில் 7 ஆயிரம் ரூபாய் மாத சம்பளத்திற்கு வேலை பார்த்து வருகிறார். இவர்களது கடைகளுக்கு அருகில் உள்ள மற்றொரு கடையில் மூலக்கரைப்பட்டி தோப்பூரைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணன் என்கிற 17 வயது சிறுவன் வேலை பார்த்து வந்துள்ளான். கடந்த 2 மாதமாக சந்தியாவை வழிமறித்து காதலிக்க சொல்லி வற்புறுத்தியுள்ளான். அதோடு சந்தியாவின் சகோதரி கோகிலாவையும் மிரட்டி, தங்கையை தன்னை காதலிக்க வைக்குமாறு தொடர்ந்து வற்புறுத்தியுள்ளான்.

 

அதற்கு சந்தியா உடன்படாமல் நான் பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த பெண், நீயோ நாடார் சமூகத்தைச் சேர்ந்தவன். இதெல்லாம் சரிபட்டு வராது என்று தொடர்ந்து மறுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமான ராஜேஷ்கண்ணன், சந்தியா எங்கு செல்கிறாள் என்று நோட்டம் பார்த்துள்ளான்.

 

கடந்த 2ம் தேதி (அக்டோபர்) பிற்பகல் 12.45 மணியளவில் சந்தியா தான் வேலைபார்த்து வந்த கடைக்கு அருகில் உள்ள குடோனுக்கு பொம்மைகளை எடுத்துச் சென்று வைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ராஜேஷ்கண்ணன், ‘‘நீ என்ன பெரிய இவளா? என்னை காதலிக்கமாட்டாயாடி’’ என்று கூறிக் கொண்டே சந்தியாவின் கழுத்திலும், முதுகிலும், கையிலும் சரமாரியாக வெட்டியுள்ளான். இதில் படுகாயமடைந்த சந்தியா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கொடூர சம்பவம் சந்தியாவின் அக்கா கோகிலா மற்றும் உடன் வேலை செய்யும் 2 பெண்கள் முன்னிலையில் நடந்தேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜேஷ்கண்ணனை ஒரு மணி நேரத்தில் கைது செய்தனர். ராஜேஷ்கண்ணனுக்கு 17 வயதாகிறது என்பதால் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான். இளம் சிறார் என்ற காரணத்தால் ராஜேஷ்கண்ணனுக்கு பெயில் கூட எளிதாக கிடைத்துவிடும்.

 

17 வயதுக்குட்பட்டவன் கொலை செய்தால் கூட அவனை குற்றவாளி என்று சொல்லக்கூடாது என்று நம் சட்டத்தில் உள்ளது. இதையே சாக்காக வைத்துக் கொண்டு நடக்கும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.

 

எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டுமென்றால், கடந்த ஆகஸ்டு மாதம் 9ம் தேதி நாங்குநேரியில் சின்னத்துரை என்கிற தலித் சிறுவனை 3 ஆதிக்கசாதி இளம் சிறார்கள் கொடூரமான முறையில் வீட்டுக்குள் நுழைந்து அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

 

இருப்பினும் இப்போது நடந்துள்ள சந்தியா படுகொலை, பெண்கள் மத்தியில் பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது என்பதும், பெண் பிள்ளைகளை பெற்றவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதும் வேதனையான உண்மைதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link