Share via:
பா.ஜ.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையில் இருந்தது அடிமைக் கூட்டணி என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளிப்படையாக கூறியுள்ளார்.
2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்வைத்துக் கொண்டு பா.ஜ.க. உடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக அ.தி.மு.க.பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் காரணமாக நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தமிழகத்தில் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க., பா.ஜ.க.வில் இருந்து விலகியதை போல மேலும் சில கட்சிகள் விலகக் கூடும் என்று காங்கிரஸ் கட்சியினர் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அந்தவகையில் ஈரோட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். பா.ஜ.க., அ.தி.மு.க. இடையிலான கூட்டணி பிளவைக் காட்டி பேரம் பேச எங்களுக்கு எண்ணம் கிடையாது. அந்த 2 கட்சிகளுக்கும் இடையில் இருந்தது அடிமைக்கூட்டணிதான்.
ஆனால் தி.மு.க., காங்கிரஸ் இடையே இருப்பது கொள்ளைக்கூட்டணி என்று தெரிவித்த அவர், தி.மு.க. கூட்டணியில் இருப்பதால் தான் நாங்கள் வெற்றியடைகிறோம்’’ என்று வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். தனியாக தேர்தலை சந்தித்தால் கேள்விக்குறிதான் என்று கூறி காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
வருகிற அக்டோபர் 14ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மகளிர் அணி மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தமிழகத்திற்கு வருகை தர உள்ள நிலையில் ஈ.வி.கே.எஸ். இப்படி பேசியதன்பின்னணி என்ன என்பது குறித்து அரசியல் நோக்கர்கள் பல சந்தேகங்களை கிளப்பி வருகின்றனர்.