Share via:
நாகை மீனவர்களை கடற்கொள்ளையர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிவிட்டு ரூ.3 லட்சம் மதிப்பிலான வலை, ஜி.பி.எஸ். கருவிகளை அபகரித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வெள்ளப்பள்ளத்தைச் சேர்ந்த மணியன், வேல்முருகன், சத்யராஜ், கோடிலிங்கம் ஆகிய 4 மீனவர்கள் நேற்று மாலை படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடல்பகுதியில் நள்ளிரவு நேரத்தில் இவர்கள் 4 பேரும் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, ஒரு படகில் 3 இலங்கை கடல் கொள்ளையர்கள் அங்குவந்தனர். இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த கடல் கொள்ளையர்கள், மீனவர்களின் படகை சுற்றி வளைத்து படகில் ஏறி கத்தியை காட்டி பொருட்களை கொடுத்துவிடும் படி மிரட்டினாரகள்.
பின்னர் பேச்சுவார்த்தை முற்றியநிலையில் கடல்கொள்ளையர்கள்,தமிழக மீனவர்கள் 4 பேரையும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் பயங்கரமாக தாக்கிவிட்டு அவர்கள் வைத்திருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள வலை, ஜி.பி.எஸ். கருவி உள்ளிட்ட பொருட்களை அபகரித்து அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இதில் பலத்த காயமடைந்த மீனவர்கள் 4 பேரும் உடனடியாக கரைக்கு திரும்பி தங்களுக்கு நடந்த அநியாயத்தை உறவினர்கள் சொல்லிவிட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனையில் சென்று சிகிச்சைக்காக சேர்ந்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த கடலோர காவல்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நள்ளிரவு நேரத்தில் அட்டூழியம் செய்து வரும் கடல் கொள்ளையர்களை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது.
