Share via:
மும்பை ஐ.ஐ.டி.யில் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கென்று தனி மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளதை கண்டித்த மாணவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மும்பை, தமிழ்நாடு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ஒன்றிய அரசின் ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கு பயிலும் மாணவர்களில் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் குறைந்த அளவிலேயே படித்து வருகின்றனர். அதிலும் சமீப காலமாக தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்கள் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டும் வலுத்து வருகிறது.
இந்நிலையில் மும்பை ஐ.ஐ.டி.யில் சைவ உணவு சாப்பிடும் மாணவர்களுக்கென்று தனி மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து கேள்வி கேட்ட மாணவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது பெரும் பேச்சுப் பொருளாக மாறியுள்ளது.
அதாவது மும்பை ஐ.ஐ.டி.யில் செயல்படும் 3 விடுதிகளுக்கு தலா 2 மேஜைகள் என 6 மேஜைகள் சைவம் சாப்பிடும் மாணவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாணவர்களுக்கு மின்னஞ்சல் எழுப்பப்பட்டுள்ளது.
மேலும் அந்த மின்னஞ்சலில், ‘‘இந்த சைவ உணவு கொள்கையை அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். மீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையுடன் சேர்த்து அபராதமும் விதிக்கப்படும்’’ என்று எச்சரிக்கைவிடுக்கப்பட்டிருந்தது. இதை பார்த்து கொதித்தெழுந்த மாணவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கினர். ஆனால் போராட்டத்தில் குதித்த மாணவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இடதுசாரி மாணவர் அமைப்பு, ‘‘கல்லூரி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை நவீன காலத்தில் தீண்டாமையை நிலைநாட்டும் சாதி பஞ்சாயத்து போன்றது’’ என்று எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. தற்போது இந்த பதிவுக்கு பலர் ஆதரவு தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
