Share via:
எம்.பி. டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராக இன்று அண்ணாமலை சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தி.மு.க. எம்.பி.யான டி.ஆர்.பாலுவின் பெயர் கடந்த ஏப்ரல் 14ம் தேதி அண்ணாமலை வெளியிட்ட தி.மு.க.வினரின் சொத்துப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அந்த பட்டியலில் டி.ஆர்.பாலுவின் பெயரை வெளியிட்டதோடு மட்டுமல்லாமல் அவர் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்ததாக அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார்.
இதனால் அதிர்ச்சியான டி.ஆர்.பாலு, அண்ணாமலை மீது சென்னை சைதாப்பேட்டை பெருநகர 17வது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். இவ்வழக்கு குறித்து மாஜிஸ்திரேட் அனிதா ஆனந்த் முன்னிலையில் விசாரணையில் உள்ளது.
இவ்வழக்கு தொடர்பாக கடந்த ஜூலை 14ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான அண்ணாமலைக்கு வழக்கின் நகல் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 2 முறை வழக்கு விசாரணையில் ஆஜராகாத அண்ணாமலை தனது வழக்கறிஞரை அனுப்பி வைத்தார்.
அதைத்தொடர்ந்து டி.ஆர்.பாலு தொடர்ந்து அவதூறு வழக்கு விசாரணை இன்று (அக்.5) சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அண்ணாமலை கண்டிப்பாக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவார் என்று நினைத்திருந்த வேளையில் இன்று காலை சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு பா.ஜ.க. பிரமுகர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அதைத்தொடர்ந்து மதியம் 2 மணியளவில் கமலாலயத்தில் பா.ஜ.க. உயர்மட்ட குழுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இக்கூட்டம் திடீரென்று ரத்து செய்யப்பட்டது எதற்காக என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் அண்ணாமலை தற்போது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கில் ஆஜராகியுள்ளார்.
இன்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பான ஆவணங்களை அண்ணாமலை சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் இவ்வழக்கின் விசாரணை வருகிற டிசம்பர் மாதம் 21ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
