Share via:
ஆந்திர அரசியலில் திடீர் திருப்பமாக பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்பட்ட பவன் கல்யாண் தற்போது திடீரென்று பா.ஜ.க.வில் இருந்து விலகுவாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய ஜனசேனா கட்சியின் தலைவரான பவன்கல்யாணுக்கு ஆந்திராவில் தனி மவுசு உள்ளது. பிரபல நடிகரான பவன்கல்யாண் ஆந்திராவில் ஜனசேனா கட்சியை தொடங்கி கடந்த தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டார்.
இதற்கிடையில் ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவை, பவன் கல்யாண் நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துக் கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பவன் கல்யாண், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தனது தலைமையிலான ஜனசேனா கட்சி விலகுவதாக அறிவித்தார். மேலும் தெலுங்கு தேசம் கட்சி தற்போது இக்கட்டான சூழ்நிலையில் தத்தளித்து வருவதாக கூறிய அவர், சந்திரபாபு நாயுடுவுக்கு உதவ வேண்டும். இந்த சூழலில் ஜனசேனா இளைஞர்களின் ஆதரவு தெலுங்கு தேசக் கட்சியினருக்கு தேவை. எனவே தெலுங்கு தேசமும், ஜனசேனாவும் இணைந்து செயல்படும் பட்சத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி மூழ்கிவிடும்’’ என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் அ.தி.மு.க. தன்னுடன் கூட்டணியில் இருந்த பா.ஜ.க.வுடனான உறவை முறித்துக் கொண்ட நிலையில் ஆந்திராவில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து ஆந்திராவில் பா.ஜ.க.வின் நிலை என்னவாகும் என்பதை அரசியல் நோக்கர்களும், விமர்சகர்களும் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.
