Share via:
தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாகவே வருமானவரித்துறை அதிகாரிகள் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு துறையினர் வீடு மற்றும் அலுவலகங்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும், தி.மு.க. முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஜெகத்ரட்சகனின் அடையாறு வீடு வீடு, அலுவலகம், கல்லூரிகள் மற்றும் அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் இன்று (அக்.5) அதிகாலை முதல் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சென்னை தி.நகரில் செயல்பட்டு வரும் ஜெகத்ரட்சகனின் ஓட்டலிலும் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் பூந்தமல்லி அருகே உள்ள தனியார் மருத்துவமனை உள்ளிட்ட சென்னையில் 70க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெகத்ரட்சகனின் நண்பர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் சோதனை நடந்து வருவதால் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது.