Share via:
இந்தியாவில் மொத்தம் 20 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாக யு.ஜி.சி. அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இங்கு வழங்கப்படும் பட்டங்கள் எதுவும் செல்லாது என்றும் அதனால் எந்த வேலை வாய்ப்பையும் பெற முடியாது என்றும் அடுக்கடுக்கான அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியக் குழு செயலர் மணிஷ் ஜோஷி இது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘யுஜிசி விதிகளுக்கு மாறாக பல்வேறு கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு பட்டங்களை வழங்குவதாக எங்களுக்கு தொடர் புகார்கள் வந்துள்ளன. இத்தகைய கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் எந்த பட்டமும் செல்லாது. அதோடு இதனால் எந்த வேலைவாய்ப்பையும் பெற முடியாது என்று எச்சரித்த அவர், இந்த பல்கலைக்கழகங்களுக்கு எந்த பட்டமும் வழங்க அதிகாரம் கிடையாது என்று தெரிவித்தார்.
அதன்படி டெல்லியில் 8 போலி பல்கலைக்கழகங்கள் செயல்படுவதாக தெரிய வந்துள்ள நிலையில், புதுச்சேரியில், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் உள்பட நாடு முழுவதும் 20 பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகிறது என்று தெரிய வந்துள்ளது.
எனவே மாணவர்கள் அனைவரும் தாங்கள் கல்லூரிகளில் சேருவதற்கு முன்னதாக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் குறித்த அனைத்து விவரங்களையும், போலி பல்கலைக்கழகங்கள் குறித்த விவரங்களை www.ugc.ac.in என்ற இணையதளத்தில் நன்கு தெரிந்து கொண்ட பின்னரே சேர வேண்டும் என்று எச்சரித்துள்ளது.
மேலும் யுஜிசி விதிகளுக்கு மாறாக பட்டப்படிப்பை வழங்கும் நிறுவனங்கள் குறித்து ugcampc@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
