Share via:
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை, இந்தியாவுடன் மருந்து இறக்குமதிக்காக புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு இலங்கை அரசு மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தது. அங்குள்ள பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்து விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டனர். ஒரு பக்கம் வேலையில்லா திண்டாட்டம் மற்றொரு பக்கம் மருந்து, அரிசி, பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் என சொல்ல முடியாத துக்கத்தில் தவித்து வந்தனர்.
அதை தவிர்க்க இந்தியா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு நிதியுதவி அளித்தும், கடன் அளித்தும் தங்கள் ஆதரவை தெரிவித்து வந்தன.
அதோடு மட்டுமல்லாமல் இலங்கையில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்ட போது காலாவதியான ஊசி மருந்து செலுத்தப்பட்ட பலர் மருத்துவமனைகளில் உயிரிழந்த சம்பவம் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து இலங்கை சுகாதாரத்துறை அவசரகால கொள்முதலுக்கு உத்தரவிட்டதால் அங்கு ஊழல் மலிந்து காணப்பட்டது. தரமற்ற மருந்துகள் உரிய சோதனையின்றி அனுமதிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில் ஊழலை தடுக்கும் நடவடிக்கையில் இறங்கிய இலங்கை அரசு, தற்போது அவசர கால மருந்து கொள்முதலை நிறுத்த முடிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய அரசுகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ள உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை மந்திரி கெகலிய ரம்புக்வெல்ல அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில் இந்தியா, வங்காளதேசத்தின் நேசக்கரங்களால் இலங்கையில் நிலவி வரும் மருந்து பற்றாக்குறை விரைவில் அகலும்.
