Share via:
தமிழகத்தில் ஆவின் பாலுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிக விலைகொடுத்து தனியார் நிறுவனங்களின் பால் வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ள ஆவின் பால் நிறுவனம் நடுத்தர மக்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் கிடைத்து வருகிறது. நீலம், பச்சை, ஆரஞ்சு என கிடைத்து வரும் பால் பிஞ்சு குழந்தைகளின் சத்துணவாகவும், தாய்ப்பாலுக்கு நிகராகவும் கருதப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஆவின் பால் விநியோகம் 50 சதவீதத்துக்கு மேல் திட்டமிடப்பட்டு குறைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011 விற்பனை செய்யப்பட்டு வந்த ஆவின் ஆரஞ்சு பால் தற்போது முற்றிலும் முடக்கப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் பால் முகவர்களின் குமுறல்கள் தற்போது பேச்சுப்பொருளாக மாறியுள்ளது.
மேலும் பால் கொள்முதலும், பால் பாக்கெட்டுகள் உற்பத்தி மற்றும் விநியோகமும் திட்டமிட்டு குறைக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் பால் நிறுவனத்தின் விற்பனையை அதிகரிக்கவே இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஆவின் நிறுவனம் ஈடுபட்டு வருவதாகவும் ஒரு பேச்சு எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து முதலமைச்சரோ, துறை சார்ந்த அமைச்சரோ விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவின் பால் முகவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.