Share via:
கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் வட்டம், ஆற்றூர் கிராமம் தோப்புவிளையைச் சேர்ந்தவர்கள் டெம்போ டிரைவர் சோம்ராஜ். இவர் தனது மனைவி சித்ரா மற்றும் மகள் ஆதிரா, மகன் அஸ்வின் ஆகியோருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் சித்ரா, ஆதிரா, அஸ்வின் ஆகியோர் நேற்று அவர்களது வீட்டில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘மின்சாரம் தாக்கி உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். தனது குடும்பத்தினரை இழந்து வாடும் டிரைவர் சோம்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்’’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
