Share via:
கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில் மிலாது நபி ஊர்வலத்தில் திடீரென்று கல்வீசி தாக்குதல் நடத்திய 40 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் அங்கு 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் ஷிவமோகா மாவட்டத்தில் மிலாது நபியை முன்னிட்டு அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது. ஊர்வலம் சாந்திநகர் ராகிகுடா பகுதியில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சிலர் ஊர்வலத்திற்குள் கற்களைவீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் போர்க்களமான அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. அதைத்தொடர்ந்து போலீசார் அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வந்து கல்வீச்சு தொடர்பாக 40 பேரை கைது செய்துள்ளனர். மேலும் அசம்பாவிதங்களை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஷிவமோகாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பேசும்போது, ‘‘இதுபோன்ற வன்முறை சம்பவங்களை அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. தற்போதைக்கு நிலைமை கட்டுக்குள் இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.
மேலும் அதிரடிப்படையைச் சேர்ந்த 2 படையினர், 20 மாவட்ட ரிசர்வ் படையினர், 500 ஹோம் கார்டு என ஷிவமோகா தற்போது போலீஸ் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஷிவமோகா பகுதியைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் மிலாது நபி ஊர்வலம் அமைதியாக நடைபெற்றது என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் ஷிவமோகா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மிதுன் குமார், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
