Share via:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் வருகிற 3ம் தேதி நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அ.தி.மு.க.வுடனான கூட்டணி முறிவுக்கு காரணம் அண்ணாமலைதான் என்று குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில், பாஜக தேசியத் தலைமை இன்னும் இதுகுறித்து எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதேசமயமம், அண்ணாமலைக்கு எதிரான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் பா.ஜ.க.வின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கமலாலயத்தில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும், கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையில் தமிழக பாஜக தேசிய இணைப் பொறுப்பாளர் பொங்குலெடி சுதாகர் ரெட்டி இவ்விவகாரம் குறித்து பேசும்போது, ‘‘பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து பிரிந்து செல்வதாக அதிமுக அறிவித்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. இருப்பினும் இதுகுறித்து விரைவில் கட்சியின் மாநிலக் குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த செப்டம்பர் 17ம் முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரையிலான 15 நாட்கள் பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அண்ணாமலை தலைமையில் அக்டோபர் 3ம் தேதி நடைபெற உள்ள பாஜகவின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
