Share via:
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது காவல் 7வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி அல்லி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். செந்தில்பாலாஜி மீது 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து இவ்வழக்கு தொடர்பான விசாரணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மாற்றம் செய்யப்பட்டது. மருத்துவமனை சிகிச்சைக்கு பின்னர் புழல் சிறையில் இருக்கும் செந்தில்பாலாஜி தொடர்ந்து தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு தனக்கு ஜாமீன் வழங்குமாறு மனுதாக்கல் செய்தார்.
ஜாமீன் குறித்து அமலாக்கத்துறையினர் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டு கடந்த செப்டம்பர் 15ம் தேதி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு மீது செப்.20ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக உத்தரவிட்டார்.
செப்.20ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அவரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது ஏன் என்பதற்காக விவரங்கள் தீர்ப்பு நகல் பதிவேற்றம் செய்யப்படும் போது முழுமையாக வெளிவரும் என்றும் நீதிபதி அல்லி தெரிவித்தார்.
இந்நிலையில்அமைச்சர் செந்தில்பாலாஜி புழல் சிறையில் இருந்தபடி காணொளி காட்சியின் மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமைச்சர் செந்தில்பாலாஜியின் காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக நீதிபதி அல்லி உத்தரவிட்டார். அதன்படி செந்தில் பாலாஜியின் காவல் வருகிற அக்டோபர் மாதம் 13ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.